Tuesday, May 22 2018

athirvu

இலங்கை இராணுவத்தை பாதுகாக்க விசேட பிரிவு.

May 14, 2018    2720

ஸ்ரீலங்காவில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்தை பாதுகாப்பதற்கான விசேட பிரிவு அமைக்கப்படும் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செயற்பாடுகளுக்கான அலுவலகமாக செயற்படும் இந்தப் பிரிவு, சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து ஸ்ரீலங்கா இராணுவத்தை பாதுகாக்கும் வகையிலான ஆவணங்களை தயாரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் 2009 ஆம் ஆண்டு மிகக்கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையான தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனினும் தாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையில் எந்தவொரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகின்றது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை கொழும்பில் வைத்து சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பல்வேறு நபர்கள் பல்வேறு விடயங்களைக் கூறுகின்றார்கள் எனவும் எனினும் தமது தரப்பு நியாயங்களை யாரும் கேட்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

ஆகவே தான் தமது தரப்பு நிலைப்பாடுகளை தெளிவுப்படுத்துவதற்கே வெளிநாட்டு செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் அலுவலகத்தை தான் நிறுவியுள்ளதாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு, எனினும் இராணுவத்தின் கருத்து அதுவல்ல, பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என நாம் கூறியதும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

2 இலட்சத்து 36 ஆயிரம் பேர் என்ற படைப்பலத்தை கொண்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீதான களங்களத்தை துடைத்து, ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் பாரிய பங்காற்ற நாம் எதிர்பார்த்துள்ளோம் எனவும் மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைக்கு தாம் எதிரானவன் அல்ல எனவும் அவர் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிப்பது குறித்தே கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவத்திலுள்ள சிலர் குற்றங்களை இழைத்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இராணுவத் தளபதி, அந்த சில குற்றங்களுக்காக முழுமையான இராணுவத்தையும் குற்றஞ்சாட்டுவது பொருத்தமற்றது எனவும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு செயற்பாடுகளுக்கான பணிப்பு அலுவலகம், கடந்த மாதம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவையான ஆவணங்களை சேகரிக்கும் பணிகளில் அந்த அலுவலகம் ஈடுபட்டுள்ளதாகவும் லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.