என் தொல்லை இனி இல்லை.. நான் போறேன்! நிம்மதியா இருங்க!

என் தொல்லை இனி இல்லை.. நான் போறேன்! நிம்மதியா இருங்க!

மலையாளத்தில் நிவின் பாலி, மடோனா, சாய் பல்லவி உள்ளிட்டோரை வைத்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய படம் ப்ரேமம். இந்திய அளவில் இந்த படம் மிகப்பெரும் ட்ரெண்ட் செட்டராக மாறியதை தொடர்ந்து அல்பொன்ஸ் புத்திரனுக்கு பெரும் புகழ் கிடைத்தது. அதன்பின்னர் சமீபத்தில் கோல்டு என்ற படத்தை இயக்கியவர் அடுத்ததாக ‘கிஃப்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

நல்லபடியாக இருந்து வந்த அல்பொன்ஸ் புத்திரன் சமீப காலமாக தனது பதிவுகளால் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். சில காலம் முன்னதாக தான் விநோதமான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் சமூக வலைதளங்களை விட்டும், சினிமா இயக்குவதை விட்டும் விலக போவதாக அறிவித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் அடிக்கடி அவர் இதுபோல பதிவுகள் இட்டுவர அதன் கமெண்டில் சிலர் வந்து அவரை கிண்டல் செய்தனர். அதற்கு அவர் ரிப்ளை செய்து ஆற்றிய எதிர்வினை இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அல்பொன்ஸ் புத்திரனுக்கு மனரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதா என்றும் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது கடைசியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அல்பொன்ஸ் புத்திரன் “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என் தாய், தந்தை, தங்கைகளுக்கு பிடிக்காது என்பதாலும், சில உறவினர்கள் அவர்களை மிரட்டுவதாலும் இனி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பதிவிடக்கூடாது நான் சும்மா இருந்தாலே எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கும் என்பேன். அப்ப அப்படியே இருக்கட்டும். பல பேருக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். உண்மையாகவே சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறாரா? அல்லது முன்பு போல ஏதோ ஒரு மனநிலையில் எழுதிக் கொண்டிருக்கிறாரா என்று தெரியாமல் சினிமா ரசிகர்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.