சீனாவில் ஒரு சிறுமி புழுக்களை வாந்தி எடுத்ததால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நோய் தொற்று சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நாடாக சீனா உள்ளது. இந்த நிலையில் ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் யாங்சோ நகரில் வசித்து வரும் 8 வயது சிறுமி வாந்தி எடுத்துள்ளார். வாந்தி எடுத்தது ஒரு குத்தமா என்று கேட்காத அளவுக்கு சிறுமியின் நிலை உள்ளது. ஏனெனில் சிறுமி உயிருடன் இருக்கும் புழுக்களை வாந்தி எடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள புழுக்களை சிறுமி வாந்தி எடுத்ததால் அவருக்கு தீவிர நோய் தொற்று இருப்பது பெற்றோருக்கு தெரிய வந்தது.
தொடர்ந்து ஒரு மாதமாக புழுக்களை சிறுமி வாந்தி எடுத்ததால் பதறிய பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். முதலில் பரிசோதனை செய்த போது சிறுமிக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. பின்னர் ஜியாங்சுவில் உள்ள சூசோவ் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ள தீவிர மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.
அதாவது சிறுமி வசித்து வந்த யாங்சோ நகரம் ஈரப்பதமான பகுதி. அங்கு அதிகமாக ஈக்கள், பூச்சியினங்கள் இருந்துள்ளன. குறிப்பாக அந்துப்பூச்சி ஈக்களால் சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. நீர் தேங்கிய பகுதிகளில் அந்துப்பூச்சி ஈக்கள் அதிகளவில் பெருக்கமடைந்து வளர்ச்சியடைகின்றன. இந்த ஈக்கள் சிறுமியின் வீட்டு பகுதியில் இருந்திருக்கலாம். அங்கு இருக்கும் தண்ணீரில் அந்துப்பூச்சிக்களின் லார்வாக்கள் இருந்து இருக்கலாம் என்றும், அந்த நீரை சிறுமி குடித்து இருந்தாலோ அல்லது உடலை சுத்தம் செய்ய பயன்படுத்தி இருந்தாலோ அதன் மூலம் லார்வாக்கள் சிறுமியின் உடலுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த லார்வாக்கள் வளர்ந்து சிறுமியின் வாந்தியில் புழுக்களாக வெளியேறி இருக்கலாம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால், நீர் நிலைகளுக்கு அருகிலும், ஈரப்பதமான இடங்களிலும் வசிக்கும் மக்கள் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.