நாம் வாழும் பூமி சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் உலகம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் வாழும் பிரபஞ்சம் மனிதனால் யூகிக்க கூட முடியாத அளவுக்கு பல மர்மங்களை கொண்டுள்ளது. பிரபஞ்சத்தின் உருவாக்கம், அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் சூரியனுக்கும் அதனை சுற்றி வலம் வரும் கோள்களுக்கும் வர கூடிய பேரழிவு குறித்து தெரிய வந்து பகீர் கிளப்பியுள்ளது. அதாவது சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் கிரகங்களுக்கு, நட்சத்திர கூட்டங்களால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
பாசிங் ஸ்டார்ஸ் (passing stars) என்ற நட்சத்திரங்கள் வேகமாக மிக நெருக்கமாக சூரிய மண்டலத்தை கடக்க இருப்பதாகவும், அவ்வாறு சூரியனுக்கு மிக அருகில் நட்சத்திரங்கள் வரும் போது அதன் ஈர்ப்பு விசையால் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் சிதறடிக்கப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது ஒரு நட்சத்திரம் சூரியனின் அளவுக்கு பெரியதாக இருந்தால், அது சூரிய குடும்பத்தை நெருங்கும்போது சூரிய குடும்பத்தின் 9வது கோளான புளூட்டோவின் எல்லையாக பார்க்கப்படும் ஊர்ட் கிளவுட் பாதிக்கப்படும். இதனால் சூரியனை சுற்றி வரும் கோள்கள் தங்கள் நிலைகளில் சுற்றி வராமல் நிலைகுலைய தொடங்கலாம். பாசிங் ஸ்டார்களின் ஈர்ப்பு விசையால் புதன் தனது சுற்றுவட்ட பாதையில் இருந்து 80 சதவீதம் வரை விலகி செல்ல நேரிடலாம். இதேபோல், புளூட்டோவும் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகிச் செல்ல வாய்ப்புள்ளது. பூமிக்கு அருகில் இருக்கும் செவ்வாய் கிரகம் தனது சுற்று வட்ட பாதையில் இருந்து தூக்கி வீசப்படலாம்.
நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால் சூரியனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் புதன் கோள் தனது சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகினால், வெள்ளி மற்றும் செவ்வாய் கோள்கள் பூமியுடன் மோதலாம். இந்நிகழ்வின் போது வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால் பூமி சூரிய குடும்பத்தில் இருந்தே வெளியே தள்ளப்படலாம். அடுத்த 4 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த கிரகங்களும் தங்களின் நிலையில் இருந்து விலகி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும், கிரகங்கள் தன் நிலையில் இருந்து விலகினால் பூமி அழிவை சந்திக்கும் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.