சென்னை / பெங்களூரு 02-07-2025: சமூக வலைத்தளங்கள், குறிப்பாக ‘கிரைண்டர் ஆப்’ போன்ற செயலிகள் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை காணாத வகையிலான புதுவித மோசடிகளும், அதிர்ச்சியூட்டும் சமூக சீரழிவுகளும் பெருகி வருகின்றன. பாலியல் ரீதியான உறவுகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை நாட தயங்குவதே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகிறது.
கிரைண்டர் ஆப் மோசடிகள்:
சுமார் 2 மாதங்களுக்கு முன்பு, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 26 வயது தொழிலதிபர் ஒருவர், ‘கிரைண்டர் ஆப்’ மூலம் ஏற்கெனவே அறிமுகமான ஒருவரை ஓரினச்சேர்க்கைக்காக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால், அந்த நபருடன் 2 ஆண் மற்றும் 1 பெண் என 3 பேரும் ஆட்டோவில் வந்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த இளைஞரை கட்டிப்போட்டு குளியலறையில் அடைத்து வைத்துவிட்டு, வீட்டில் இருந்த 31 சவரன் நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். குளியலறையில் இருந்து இளைஞர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்த பிறகுதான் மீட்கப்பட்டார்.
இதேபோல், தர்மபுரியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் ‘கிரைண்டர் ஆப்’ மூலம் பழகி நட்பாகி, பண மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இப்படி, ஓரினச்சேர்க்கையாளர்கள் சந்திப்பு எனக் கூறி பலரிடமும் மோசடிகள் நடந்து வருகின்றன.
அதிர்ச்சி தரும் தாய்-மகள் விவகாரம் – பெங்களூரு சம்பவம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், இந்த சமூக சீரழிவின் உச்சபட்ச பரிமாணத்தைக் காட்டுகிறது. 38 வயதான ஒரு பெண், திருமணமாகி 8 வருடங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்து, தனது 6 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவரும் முன்னர் ‘கிரைண்டர் ஆப்’ மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது அவரது கணவருக்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது அந்த குழந்தைக்கு 14 வயதாகிறது. பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தாய் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அந்த மாணவி, திடீரென ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதாவது, கடந்த 6 ஆண்டுகளாகவே, தன்னுடைய தாய் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வருவதாகக் கூறி அழுதுள்ளார்.
காவல்துறை விசாரணை மற்றும் கைது:
மாணவியின் வாக்குமூலத்தைக் கேட்ட அங்கிருந்த ஆசிரியைகள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, பள்ளியின் தலைமை ஆசிரியர் தரப்பிலிருந்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரும் விரைந்து பள்ளிக்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் சொல்லி அழுதுள்ளார்.
இதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக அந்த மாணவியின் தாயிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதற்கு அந்த தாய், “திருமணத்திற்குப் பிறகு கணவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுதான், என்னுடைய மகளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன்” என்று மிகவும் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் மாணவியின் தாயை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.