புது டெல்லி: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளாகி 260க்கும் மேற்பட்டோர் பலியான சோகச் சம்பவம் நடந்து 38 மணி நேரமே ஆன நிலையில், அதே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டெல்லியிலிருந்து வியன்னா புறப்பட்ட மற்றொரு விமானம் திடீரென 900 அடி உயரத்தை இழந்தது, செங்குத்து சரிந்து கீழே வந்துள்ளது.
பயணிகள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம், இந்தியாவின் விமானப் பாதுகாப்புக் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதோடு இதனை பல நாட்களாக ஏர் இந்தியா விமான சேவை மறைத்து வைத்திருந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் கூடவே வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 14 அன்று அதிகாலை 2:56 மணிக்கு டெல்லியிலிருந்து வியன்னா நோக்கி புறப்பட்ட போயிங் 777 ரக ஏர் இந்தியா விமானம் AI187, இடியுடன் கூடிய மழையின் போது கிளம்பியது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் சுமார் 900 அடி உயரத்தை இழந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், விமானத்தில் “ஸ்டால் அலர்ட்” (Stall Alert – வேகம் குறைந்து கீழே விழும் எச்சரிக்கை) மற்றும் “டோன்ட் சின்க்” (Don’t Sink – கீழே விழாதே) என்ற (GPWS – Ground Proximity Warning System) எச்சரிக்கைகள் பலமுறை ஒலித்துள்ளன.
உயிருக்கு அச்சுறுத்திய எச்சரிக்கைகள்:
“ஸ்டால்” மற்றும் “டோன்ட் சின்க்” எச்சரிக்கைகள், புறப்பட்டவுடன் விமானம் உயரத்தையும், கட்டுப்பாட்டையும் இழந்து, விபத்துக்குள்ளாகும் அபாயத்தைக் குறிக்கும் மிக ஆபத்தான சமிக்ஞைகளாகும். உடனடித் திருத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விபத்து நிச்சயம். அதிர்ஷ்டவசமாக, விமானிகள் நிலைமையைச் சமாளித்து விமானத்தை வியன்னாவுக்குச் செலுத்தியுள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (DGCA) விசாரணையை அடுத்து, இரு விமானிகளும் பறக்கும் பணிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரகசியமாக மறைக்கப்பட்ட தகவல்கள்:
சம்பவம் குறித்து அறிந்த அதிகாரிகள், விமானம் புறப்பட்ட உடனேயே பல எச்சரிக்கைகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர். “விமானம் பறக்கும்போது, ஸ்டிக் ஷேக்கர் எச்சரிக்கை மற்றும் GPWS ‘டோன்ட் சின்க்’ எச்சரிக்கை தோன்றின. ஸ்டால் எச்சரிக்கை ஒரு முறையும், GPWS எச்சரிக்கை இரண்டு முறையும் வந்தது,” என்று அடையாளம் தெரியாத அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “ஏறும் போது சுமார் 900 அடி உயரம் இழப்பு ஏற்பட்டது. பின்னர், விமான ஊழியர்கள் விமானத்தை மீட்டு வியன்னாவுக்குத் தொடர்ந்தனர்,” என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, ஆரம்பகட்ட விமான அறிக்கை “கலவரம் காரணமாக ஸ்டிக் ஷேக்கர்” என்று மட்டுமே குறிப்பிட்டது. மிகவும் தீவிரமான “ஸ்டால்” மற்றும் “டோன்ட் சின்க்” எச்சரிக்கைகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. AI171 விபத்துக்குப் பிறகு DGCAவின் தீவிர ஆய்வின் போது, விமானத் தரவுப் பதிவேட்டின் ஆழமான மதிப்பாய்வில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.
விசாரணை தீவிரம்:
இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தைத் தொடர்ந்து, இரு விமானிகளும் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏர் இந்தியாவின் பாதுகாப்புத் தலைவரும் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் விமானப் பாதுகாப்புக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த தொடர் குளறுபடிகள், கோடிக்கணக்கான பயணிகளின் பாதுகாப்புக் குறித்த அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதுடன், விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு பெரிய மறுசீரமைப்பு தேவை என்பதையும் உணர்த்துகிறது.