பெரு நாட்டில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையான ஒரு பழங்கால நகரத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, அப்பகுதியின் பண்டைய நாகரிகங்கள் குறித்த புதிய தகவல்களை வெளிக்கொணரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரம், கடல் மட்டத்திலிருந்து 1,970 அடி உயரத்தில் உள்ள ஒரு மறைவான பகுதியில் அமைந்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள், ட்ரோன் காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இந்த நகரத்தில் மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்ட பழங்கால வீடுகள் மற்றும் கட்டிடங்கள் காணப்படுகின்றன.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த இடம் பசிபிக் கடலோரப் பகுதிகளையும், ஆண்டிஸ் மற்றும் அமேசான் பகுதிகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான வணிக மையமாக செயல்பட்டிருக்கலாம். இது பண்டைய வர்த்தகப் பாதைகள் குறித்த புதிய புரிதல்களை வழங்குகிறது.
பரகா மாகாணத்தில் உள்ள பெனிகோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம், கிமு 1200 மற்றும் 1500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்றான, 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காரல் சுப் நாகரிகத்தின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காரல் நாகரிகம், அதன் 32 கட்டமைப்புகளுடன், எகிப்து, இந்தியா, சுமேரியா மற்றும் சீனா போன்ற நாகரிகங்களின் சமகாலத்தவையாக கருதப்படுகிறது.
பெனிகோ நகரில் தொல்லியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். காரல் நாகரிகம் இயற்கை பேரிடர்களால் அழிந்திருக்கக்கூடும் என வல்லுநர்கள் கருதும் நிலையில், புதிதாக கண்டறியப்பட்ட இந்த பழங்கால நகரம் பல மர்மங்களை வெளிக்கொணரும் என்று தொல்லியல் அறிஞர்கள் நம்புகிறார்கள். இந்த கண்டுபிடிப்பு அப்பகுதியின் வரலாற்றுக்கும், பண்டைய மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதக்கூடும்.