தமிழ் சினிமாவின் ‘தல’ என அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார், தற்போது தனது ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். தான் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ள அவரது சமீபத்தியப் பேச்சு, திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள அஜித், அடுத்ததாக தனது தீவிர ஆர்வம் கொண்ட சிற்றூந்து (கார்) பந்தயங்களில் கவனம் செலுத்தவுள்ளார். இனிமேல் வருடத்தின் ஆறு மாதங்கள் நடிப்பிற்கும், ஆறு மாதங்கள் சிற்றூந்து பந்தயத்திற்கும் என நேரத்தைப் பிரித்துக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின்படி, அவரது அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
இந்த பரபரப்பான சூழலில்தான், இந்திய ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளித்த அஜித் குமார், ஆங்கிலத் திரைப்படங்களில் நடிப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, “ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (Fast & Furious), எஃப்1 (F1) போன்ற திரைப்படங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தால், நிச்சயமாக நடிப்பேன்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அஜித்தின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழ் நடிகர் ஒருவர் ஹாலிவுட் தளத்தில் கால்பதிப்பதற்கு இது ஒரு தொடக்கமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.