Posted in

செம்மணி படுகொலை: ஐ.நா. விசாரணை கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் இணைந்து நேற்று (ஜூலை 5) கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு முதல் தற்போதுள்ள மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வரை எந்தவிதக் கண்டனக் குரலையும் எழுப்பாமலும், உரிய நடவடிக்கை எடுக்காமலும் மௌனம் காத்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும், இந்திய அரசு வழக்கம் போலக் கள்ள மௌனம் காக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.