யாழ்ப்பாணம் – செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் அங்கு நடந்ததாகக் கூறப்படும் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில், ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam) இந்த விவகாரத்தில் சர்வதேச தலையீடு அவசியம் மற்றும் அவசரம் என்று வலியுறுத்தியுள்ளார்.
“இனப்படுகொலை குற்றவாளிகள் தங்களது சொந்தக் குற்றங்களை விசாரிக்க முடியாது. எனவே, சர்வதேச தலையீடு அவசியம் மட்டுமல்ல, அது அவசரமானது” என்று விஜய் தணிகாசலம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செம்மணிக்கு விஜயம் செய்த நிலையில், இந்த மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையின் உடனடித் தேவையை அவரது வருகை மேலும் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழிகளில் இதுவரை 33 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல 10 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடையவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் ஆடைகள், பள்ளிப் புத்தகப்பைகள் போன்ற பொருட்களுடன் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், அங்கு நடந்த கொடூரமான படுகொலைகளின் பரிமாணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக விஜய் தணிகாசலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. செம்மணி படுகொலைகளுக்கு நீதி வேண்டி பல்வேறு தரப்பினரும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.