நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்கவும் அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று அவர் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்குக் கர்நாடக கலாச்சார அமைப்புகள் மற்றும் கன்னட ஆதரவு குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் முறையான மன்னிப்பு கேட்கும் வரை அவரது படம் மாநிலத்தில் வெளியிடப்படாது என்று கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர் சிவராஜ் தங்கடகி மற்றும் கே.எஃப்.சி.சி. (கர்நாடக திரைப்பட வர்த்தக சபை) திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்கனவே கமல்ஹாசனை கடுமையாகச் சாடியிருந்தது. “நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா? இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த புதிய நீதிமன்ற உத்தரவு, கமல்ஹாசன் மீதான சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியுள்ளது.