வடக்கு ஈராக்கின் மலைப்பகுதியில் உள்ள ஒரு குகைக்குள் ஏற்பட்ட கோரமான சம்பவத்தில், மீத்தேன் வாயு தாக்கி 12 துருக்கி வீரர்கள் உயிரிழந்துள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 8 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 வீரர்கள் உயிரிழந்ததையடுத்து இந்த எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தச் சம்பவம் ‘க்ளா-லாக் (Claw-Lock)’ ஆபரேஷன் மண்டலத்தில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) பயங்கரவாதிகள் முன்பு பயன்படுத்திய ஒரு குகையில், காணாமல் போன ஒரு சக வீரரின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்துள்ளது. மே 2022 இல் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒரு காலாட்படை அதிகாரியின் உடலை மீட்பதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீத்தேன் வாயு நிறமற்ற, மணமற்ற மற்றும் எரியக்கூடிய வாயு. இது அதிக செறிவில் இருக்கும்போது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இந்த குகையில் சுமார் 19 துருக்கி வீரர்கள் மீத்தேன் வாயுவின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 5 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துள்ளது. மேலும், பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலர் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்யப் பயணிக்கின்றனர்.
குர்திஷ் தொழிலாளர் கட்சி (PKK) கடந்த மே மாதம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து விடுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் துருக்கி மற்றும் குர்திஷ் தரப்புக்கு இடையே நிலவி வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.