முல்லைத்தீவு: புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று (ஜூலை 10) அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் காணியில், விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பதுங்கு குழிக்குள் இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹெரத் தலைமையிலான பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, புதுக்குடியிருப்பு பொலிஸார், கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் இணைந்து அகழ்வுப் பணிக்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குழிக்குள் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது. மேலும், அகழ்வுப் பணிக்காக புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஜே.சி.பி இயந்திரமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு நீதவான் நேரில் வந்து பார்வையிட்ட பின்னரே, ஆயுதங்களைத் தேடும் இந்த முக்கிய அகழ்வுப் பணிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. தற்போது பொலிஸார் பலத்த பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த அகழ்வுப் பணி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.