Posted in

கடவுளின் பெயரால் நடக்கும் ‘வியாபாரம்’! – ஆன்மீகம் எங்கே போனது?

செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயிலில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 5) நண்பகல் 12.55 மணியளவில் பக்தர்களுக்கும், கோயில் குருக்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், இறுதியில் பெரும் கைகலப்பில் முடிவடைந்துள்ளது. இந்தக் கைகலப்பு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மிகுந்த மக்கள் கூட்ட நெரிசலில், நீண்ட வரிசைகளில் பல மணிநேரம் இறைவனுக்கான பூஜை தட்டுகளை கோயில் குருக்களிடம் ஒப்படைக்க பக்தர்கள் கால்கடுக்க காத்திருந்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த சில கோயில் குருக்கள், நாட்டிலிருந்த பல திசைகளிலிருந்தும் வந்த பக்தர்களிடம், “பூஜை தட்டில் கட்டாயமாக பணம் வைத்து பூஜை தட்டுகளை தர வேண்டும். அவ்வாறு பணம் இல்லாதபட்சத்தில் அந்த பூஜை தட்டுக்களை வாங்க முடியாது” என்று அதிகாரத்துவமான மற்றும் மிரட்டும் தொணியில் கட்டளையிட்டுள்ளனர்.

பொருளாதார வசதிகள் இல்லாத பக்தர்களால் பணம் வைக்காமல் கையளிக்கப்பட்ட பல பூஜை தட்டுகள், அந்த ஆலய குருக்கள் போர்வையில் இருந்தவர்களால் சிறிதும் மனசாட்சியின்றி, அதே பக்தர்களிடம் மீண்டும் அதே அதிகாரத்துவ, எச்சரிப்பு தொணியுடன் (தூக்கியெறிவதைப் போல) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதே சமயம், பல மணிநேரம் மக்கள் நெருசலில் பணம் இல்லாமல் பூஜை தட்டுகளுடன் காத்திருந்த பக்தர்களின் பூஜை தட்டுகள் வாங்கப்படாமல், அதிக பணம் வைத்த பக்தர்களின் பூஜை தட்டுகள் மட்டும் அங்கிருந்த சில ஆலய குருக்களால் தேடித் தேடி வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தச் செயலானது அங்கிருந்த பக்தர்களுக்கு அருவருப்பையும், ஏமாற்றத்தையும், எரிச்சலையும், மன உளைச்சலையும், மிகுந்த கோபத்தையும் வரவழைத்தது. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், இந்தச் செயலை எதிர்த்து கேள்வி கேட்ட சில பக்தர்களுக்கு, மிகுந்த அசமந்த போக்குடனும், சற்றும் பொறுப்பற்ற விதத்திலும் அந்த ஆலய குருக்களால் வழங்கப்பட்ட பதிலானது: “இஷ்டம் என்றால் பணத்துடன் சேர்த்து பூஜை தட்டை தரவும், கஷ்டம் என்றால் இந்த இடத்தை விட்டு வெளியேறவும்” என்ற விதத்தில் அமைந்திருந்தது.

ஆலய குருமாரின் இந்த மனிதத்துவம் இல்லாத செயல்பாடும், பொறுப்பற்ற பதிலும், பண ஆசையுமே வாக்குவாதமாக உருவெடுத்து, இறுதியில் கைகலப்பாக மாறியது.

இன்றைய காலகட்டத்தில், புராண முக்கியத்துவம் வாய்ந்த இவ்வாறான மத ஸ்தலங்களும் (மற்றும் இலங்கையிலுள்ள ஏனைய மத ஸ்தலங்களும்) பணம் சேகரிக்கும் நோக்கத்துடனும், வியாபார போர்வையிலும் இயங்குவது மிகவும் வேதனையளிக்கிறது.

பக்தர்கள் ஆன்மீகம், பக்தி எனும் வட்டத்தில் மட்டும் நின்றுவிடாமல், சற்று வெளியே வந்து நமது ஆறாவது அறிவுடன் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்படிச் செய்தால், கடவுள்கள் பெயரில் இவ்வாறாக பணம் பறிக்கும் கும்பலுக்கும், வியாபார நோக்கத்துடன் மத ஸ்தலங்களை இயக்கும் நூதன திருடர்களுக்கும் சிறந்த பாடம் புகட்டலாம். மேலும், முன் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருந்து நமது வரும் தலைமுறையினருக்கும் சிறந்த வளமான பாரம்பரியமுள்ள, ஊழல் அற்ற ஒரு சிறந்த நாட்டையும், எதிர்காலத்தையும் கையளிக்கலாம்.