பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கப் பாதிக்கப்பட்டோர் தரப்பினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இதற்காக நீதிமன்றத்தில் விரைவில் சமர்ப்பணங்களை முன்வைத்து, உரிய அனுமதிகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் சட்டத்தரணி நிரஞ்சன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரையில், மொத்தமாக 65 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு, அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த அகழ்வுகள் மேலும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செம்மணி புதைகுழி விவகாரம், இலங்கையின் கடந்தகால இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், நீண்டகாலமாகப் புதைந்து கிடக்கும் மர்மங்களுக்கு விடை தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.