சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் போதைப்பொருளைத் தயாரித்த குற்றச்சாட்டில் இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் பயன்பாடு கடுமையான மன மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் தயாரிப்பு
இந்தியாவின் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலேயே இந்த போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரண்டரை மாதங்களாக விடுமுறையில் இருந்து அவர்கள் போதைப்பொருட்களை தயாரித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
‘பிரேக்கிங் பேட்’ தொடருடன் ஒப்பிடு
இந்த சம்பவம் பிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான ‘பிரேக்கிங் பேட்’ பாணியில் அமைந்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். அந்தத் தொடரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு வேதியியல் ஆசிரியர், தனது முன்னாள் மாணவருடன் இணைந்து போதைப்பொருள் தயாரிப்பது போல் கதைக்களம் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.