செரிமானத்துக்கு உதவும் அதோ முக விராசனம்!

அதோ முக விராசனம் வாயு தொல்லைகளை நீக்கி நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. முதுகு தண்டுவடம் விரிவடைவதால் முதுகில் கூன் விழாமல் நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.

யோகா விரிப்பின்மேல் முழங்கால்களிட்டு அமர வேண்டும். முழங்கால்கள் இரண்டையும் ஒரு சேர வைத்து பாதங்களை பின்புறமாக நீட்டியவாறு அமர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக கைகள் இரண்டையும் இணைத்தவாறு முன்புறம் குனிந்து, தரையில் உள்ளங்கைகள் படும்படி வைக்க வேண்டும்.

தோள் பட்டை, மார்பு, இடுப்பு ஆகியவை நேராக தளர்த்தியபடியும் கைகள் காதுகளோடு ஒட்டியவாறும் இருக்க வேண்டும். முகத்தை தரையில் ஊன்றி, கண்கள் மூடிய நிலையில் 10 – 20 வினாடிகள் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்கலாம். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு மெதுவாக முதலில் தலையைத் தூக்கி பழைய நிலைக்குத் திரும்பலாம்.

நன்மைகள் :

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் செரட்டோனின் சுரப்பு சமநிலைப்படுத்தப்படுகிறது. முழங்கால்கள், கணுக்கால்களை நன்கு மடக்கி அமர்ந்து செய்வதால், இடுப்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தளர்வடைகின்றன.

வாயு தொல்லைகளை நீக்கி நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. முதுகு தண்டுவடம் விரிவடைவதால் முதுகில் கூன் விழாமல் நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.

கவனத்தை ஒருமுகப்படுத்தி செய்யும்போது, நினைவாற்றல் மேம்படுகிறது. கணுக்கால், பாதங்களை நன்றாக நீட்டி செய்வதால், தட்டைப்பாதம்(Flat foot) நீங்கி பாதங்களில் முறையான வளைவுகள் உருவாகின்றன.