16 வயது சிறுமியை கவுரவ கொலை செய்த பெற்றோர்!

பீகார் மாநிலத்தில் காதலனுடன் ஓடியதால் பெற்ற மகள் என்றும் பாராமல் கவுரவ கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலம் கயா மாவட்டம் பட்வா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த வாரம் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.

நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது உடலை போலீசார் மீட்டனர். தலையை தேடியபோது அருகில் சற்று தொலைவில் வயலில் கிடந்ததை கண்டுபிடித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

முதலில் இது கற்பழிப்பில் நடந்த கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிப்பு நடக்கவில்லை என்று தெரியவந்ததால் கொலைக்கு வேறு காரணம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதற்காக பெற்றோர் மற்றும் சிறுமியின் அக்காள், தங்கைகளை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் யாரும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில் இது கவுரவ கொலை என தெரியவந்தது. சிறுமி காதலனுடன் ஓட்டம் பிடித்து 3 நாட்களுக்கு பின் திரும்பியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோரே கவுரவ கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.