சீனாவில் மணப்பெண் பற்றாக்குறை- வியட்நாமில் இருந்து சிறுமிகள் கடத்தல்!

சீனாவில் பாலின சமநிலையின்மை காரணமாக மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வியட்நாமில் இருந்து சிறுமிகள் கடத்தி வரப்பட்டு திருமணத்திற்காக விற்கப்படுகின்றனர்.

சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக சீன அரசு கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இதற்கு பலன் கிடைத்தது. மக்கள்தொகை குறையாவிட்டாலும் கடந்த சில வருடங்களாக பிறப்பு விகிதம் சீராக இருப்பதால் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. ஆனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

பெண்கள் பிறப்பு விகிதம் குறைந்து ஆண்கள் பிறப்பு அதிகரித்துள்ளது. பாலின விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 110 ஆண்கள், 120 ஆண்கள் என்று இருக்கிறது. இதனால் இளம் பெண்கள் பற்றாக்குறையில் சீனா தத்தளிக்கிறது. 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இவர்களுக்கு சீனாவில் மணப்பெண்கள் கிடையாது. இதனால் இளைஞர்கள் பலர் வயது அதிகரித்து முதுமை அடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பெண் சிசுக்கொலை தான் என்று தெரிய வந்துள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த அரசு சிசுக்கொலையை கண்டு கொள்ளாமல் ஆதரித்தது.

மேலும் சீனப்பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு, திருமணத்தை தள்ளி போடுதல் போன்றவையும் ஒரு காரணம்.

சீனாவில் மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இதனை கவனித்த ஆட்கடத்தல் கும்பல், பிரச்சினையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள வியட்நாமில் இருந்து சிறுமிகளையும், இளம்பெண்களையும் ஆசைவார்த்தை கூறி கடத்தி வந்து, சீனாவில் மணப்பெண்களாக நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.

கம்போடியா, மியான்மர், லாவோ, நாடுகளில் இருந்தும் இளம்பெண்கள் சீனாவுக்கு கடத்தப்படுகிறார்கள். வியட்நாம்- சீன எல்லையில் பெண்கள் கடத்தல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இது சீன அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.