நடிகை தமன்னாவுக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையாவிட்டாலும், பக்கத்து தேசமான தெலுங்கிலும்.. வடக்கு தேசமான இந்தியிலும் தமன்னாவுக்கு இன்றளவும் வரவேற்பு உள்ளது. அண்மையில் கூட ஒரு தெலுங்குப் படத்தில் ஒற்றைப்பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதையடுத்து, இந்தியில் உருவாகும் ‘பப்ளி பவுன்சர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் மிக வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரம் அமைந்திருப்பதால் தமக்கு இந்தப் படம் திரையுலகில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று நம்புவதாக கூறுகிறார் நடிகை தமன்னா.
சினிமா, அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும், பிரபலங்களுக்கும் பொது இடத்தில் பாதுகாப்பு அளிப்பவர்களையும் கேளிக்கை விடுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களையும் ‘பவுன்சர்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒரே மாதிரியான சீருடை அணிந்து, நல்ல உடற்கட்டுடன் இருக்கும் இவர்களுக்கு கணிசமான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த இந்தத்துறையில், இப்போது பெண்களும் கால்பதித்துள்ளனர். ஒரு பெண் ‘பவுன்சர்’ பற்றிய கதையை மையமாக வைத்து, ‘பப்ளி பவுன்சர்’ திரைப்படம் உருவாகி உள்ளது.
மேலும், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவது, சில நிமிடங்களே திரையில் தோன்றும் கதாபாத்திரம் என்றாலும், ரசிகர்களின் மனதைக் கவரும் எனில் அதில் நடிப்பது ஒன்றும் தவறல்ல. ஒரு சினிமா நட்சத்திரமாக ரசிகர்களை மகிழ்விப்பது என் கடமை என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் தமன்னா.