வேடிக்கை காட்டியபோது விபரீதம்.. பாதுகாவலரின் விரலைக் கடித்து துண்டாக்கிய சிங்கம்!

இந்த செய்தியை பகிருங்கள்

கிங்ஸ்டன்: ஜமைக்கா உயிரியல் பூங்கா ஒன்றில், விளையாட்டு காட்டிய பாதுகாவலரின் விரலை சிங்கம் கடித்து துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரியல் பூங்காக்களில் இருக்கும் ஆபத்தான விலங்குகள்கூட அதன் பாதுகாவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் செல்லப் பிள்ளைகள் போல் விளையாடும். இதனாலேயே பார்வையாளர்கள் முன்பு அவர்கள் விலங்குகளை வைத்து விளையாட்டு காட்டுவார்கள்.

 

ஆனால் அப்படி விளையாட்டுக்காக செய்த காரியம் ஒன்று, ஜமைக்காவில் விபரீதமாகி இருக்கிறது. சிங்கத்திடன் விளையாட்டு காட்டி விரல்களை இழந்துள்ளார் அதன் பாதுகாவலர் ஒருவர்.

ஜமைக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 15க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சூழ்ந்திருக்க, கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்கத்திடம் விளையாட்டு காட்டி இருக்கிறார் அதன் பாதுகாவலர். அப்போது கடும் கோபத்தில் இருந்துள்ளது அந்தச் சிங்கம்.

கோபத்தில் சீறிய சிங்கத்தின் வாய்க்குள் விரலை விட்டு எடுத்துள்ளார் பாதுகாவலர். பின் மீண்டும் அதே மாதிரி சிங்கத்தை தொட அவர் முயற்சித்துள்ளது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பாதுகாவலரின் விரலைக் கவ்வி பிடித்து விட்டது அந்த சிங்கம். வலியில் அலறிய அந்த ஊழியர் சிங்கத்தின் வாயில் இருந்து தனது விரலை விடுவிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் சிங்கம் அவரது விரலை விடவில்லை. இதனால் தன்னால் முடிந்தமட்டும் முயற்சித்துள்ளார் அந்த பாதுகாவலர். இதில் அவரது விரல் துண்டானது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவத்தை வேடிக்கைப் பார்த்தவர்கள், முதலில் அந்த பாதுகாவலர் சிங்கத்துடன் விளையாடுகிறார் என்றே நினைத்துள்ளனர். பின்னர் அவர் வலியால் துடித்து, கீழே விழுந்த பிறகுதான் விபரீதத்தை உணர்ந்துள்ளனர். எவ்வளவுதான் பழகினாலும் விலங்குகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இப்படியெல்லாம் விளையாடக்கூடாது என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக, வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

 

மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என ஜமைக்கா உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரியல் பூங்காக்கள் எப்போதும் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும்படி, அதன் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பூங்கா நிர்வாகம் உறுதியளித்துள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us