40 ஆண்டுகளாக.. ஒரே இடத்தில்.. ஒரே மாதிரி போஸ்.. தொப்பி, பாட்டிலைக்கூட மறக்கலைங்க!

இந்த செய்தியை பகிருங்கள்

கலிபோர்னியா: ஐந்து நண்பர்கள் தங்களது நட்பைக் கொண்டாடும் விதமாக கடந்த நாற்பது ஆண்டுகளாக ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் சந்தித்து ஒரே மாதிரியான புகைப்படங்களை எடுத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்’ எனப் பாடல்களில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நட்பைக் கொண்டாடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நட்பு முக்கியமானது. காலத்தின் ஓட்டத்தில் எல்லாராலும் நட்பைக் கொண்டாட முடிவதில்லை என்றாலும், ஒரு சிலர் இதில் விதிவிலக்கு.

கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்த ஐந்து நண்பர்களும் அப்படிப்பட்டவர்கள் தான். கடந்த நாற்பது ஆண்டுகளாக இவர்கள் ஒரே இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதிரி போஸில் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

முதன்முதலாக கடந்த 1982ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள கோப்கோ ஏரியில் இந்த நண்பர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். மூன்றாவது நண்பர் மட்டும் கையில் ஏதோ பாட்டிலைக் காட்டியபடி அந்த புகைப்படத்தில் உள்ளார். ஏரியில் குளித்து விட்டு எடுத்த புகைப்படம் என்பது பார்த்தாலே தெரிகிறது.

அப்போது ஆரம்பித்து, கடந்த நாற்பது ஆண்டுகளாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி ஒரு குரூப் போட்டோ எடுப்பதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். முதல்முறை எடுத்த புகைப்படத்தை அப்படியே பிரதி எடுக்க வேண்டும் என்பதற்காக, அதே வரிசையில் அந்த ஐந்து நண்பர்களும் அமர்ந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

கூடவே மறக்காமல் கையில் பாட்டிலை பிடித்திருக்கும் நபரும் எல்லா புகைப்படங்களிலும் கையில் கிடைத்த பாட்டிலை வைத்து போஸ் கொடுத்திருக்கிறார். இது மட்டுமின்றி இரண்டாவது நபர் கையில் தொப்பி பிடித்திருப்பது ஆகட்டும், வலது பக்கத்தில் முதலில் அமர்ந்திருப்பவர் சற்றே சாய்ந்து அமர்ந்திருப்பது என அனைத்து புகைப்படங்களையும் முடிந்தவரை ஒரே மாதிரி எடுத்திருக்கிறார்கள்.

இந்த ஐந்து பேரில் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு உள்ளதாம். எனவே இந்த முறை ஐந்து பேர் சேர்ந்து புகைப்படம் எடுக்க முடியாமல் போய்விடுமோ என முதலில் ரொம்பவே பயந்து விட்டார்களாம் இந்த நண்பர்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி, ஐந்து பேரும் சேர்ந்து இந்தாண்டும் அழகிய புகைப்படம் ஒன்றை எடுத்து விட்டார்கள்.

தங்களது இந்த போட்டோக்களை நண்பர்கள் இணையத்தில் பகிர, நெட்டிசன்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். சமீபகாலமாக இதுபோல் பழைய புகைப்படங்களை ரீகிரியேட் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் இவர்களோ கடந்த 40 ஆண்டுகளாக இப்படி செய்து வருவது, அவர்களின் நட்பின் ஆழத்தை விளக்குவதாக உள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us