கொழும்பு புறநகர பகுதியான கிரிபத்கொட முதியன்சலாகே வத்தே பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து கிரிபத்கொட பொலிஸாரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொடையில் உள்ள தேசிய மனநல நிறுவகத்தில் இருந்து பெறப்பட்ட மருந்து சீட்டுகள் குற்றம் நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.