லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பெகா பகுதியில் அமைந்த சுரங்க பாதை மீது நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. ஒரு ஆண்டு கடந்து நடந்து வரும் மோதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் காயமடைந்து உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது.
லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. சிரியா நாட்டின் எல்லையை பகுதியில் லெபனான் நாடு அமைந்து உள்ளது. லெபனானில் சுரங்க பாதை அமைத்து ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆயுதங்களை கடத்துகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இந்த சூழலில், நேற்றிரவு இஸ்ரேலின் விமான படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்க பாதை மீது வான்வழி தாக்குதலை நடத்தியது.சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்க கூடிய இந்த சுரங்கம் வழியே ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களை கடத்துகிறது என இஸ்ரேல் குற்றச்சாட்டு கூறி வருகிறது.
கடந்த காலங்களிலும் இந்த சுரங்க பாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சுரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வழிகளை மேற்கொள்வோம் என இஸ்ரேல் உறுதி கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடியது என கூறப்படும், ஆயுதங்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் அடங்கிய பல்வேறு இடங்கள் மீதும் விமானங்கள் தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ள சூழலில், இதனை மீறும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.