பாஜகவுக்கு ‘வாய்ப்பில்லை ராஜா’.. ஆனால் விஜய் இணைந்தால் என்ன? இந்தியா டுடே சர்வேயின் முடிவு என்ன?

சென்னை: தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் நடந்தாலும், பாஜகவால் ஒரு சீட்டைக் கூட வெல்ல முடியாது என இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்து வரும் நிலையிலும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ‘ஜீரோ’ என்ற நிலைதான் கருத்துக்கணிப்பு முடிவுகளில் எதிரொலிக்கிறது.

இந்தியா டுடே-சி வோட்டர் இணைந்து ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9, 2025 வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், 1,25,123 பேரைச் சந்தித்து அவர்களின் மனநிலை ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் நடந்தால்…

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மக்களின் மனநிலையை ஆய்வு செய்த இந்தியா டுடே – சி வோட்டர், தற்போது தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும், வாக்கு சதவீதம் எவ்வளவு இருக்கும் என்பதை வெளியிட்டுள்ளது. இதில், திமுக தலைமையிலான கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% உயர்ந்துள்ளது என்றும், பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% சரிந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதம் எப்படி இருக்கும்?

கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 18% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்தியா கூட்டணி 47% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 23% வாக்குகளையும் பெற்றிருந்தது. இப்போது தேர்தல் நடந்தால், பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% உயர்ந்து 21% ஆக இருக்கும் என்றும், இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% உயர்ந்து 52% ஆக இருக்கும் என்றும், அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 23% இலிருந்து 20% ஆகக் குறையும் என்றும் இந்தியா டுடே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக – 0 சீட்கள்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியது. ஸ்டாலின் தலைமையிலான திமுக 22 தொகுதிகளையும், காங்கிரஸ் 9 தொகுதிகளையும் வென்றது. இப்போது தேர்தல் நடந்தாலும், திமுக அனைத்து தொகுதிகளிலும் வெல்லும் என்றும், பாஜக மற்றும் அதிமுகவுக்கு ஒரு சீட்டுகூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியவில்லை. அண்ணாமலையே கோவை தொகுதியில் தோல்வியைத் தழுவினார்

பாஜகவுக்கு என்ன வழி?

தற்போது தேர்தல் நடந்தாலும், பாஜக மற்றும் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இரு திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் உதவியுடன் மட்டுமே பாஜக மற்றும் அதிமுக திமுகவுக்கு சவால் அளிக்க முடியும் எனத் தெரிகிறது.

பாஜக, அதிமுக மற்றும் விஜய்யின் கட்சியுடன் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே, திமுகவுக்கு கடுமையான சவால் அளிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் இந்தியா டுடே அலசலில் தெரிவித்துள்ளனர்.

சி-வோட்டர் இயக்குனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், “தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், 2026 இல் நடைபெற உள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தலில் X ஃபேக்டராக இருக்கக்கூடும். தேசிய அளவில் அதிக செல்வாக்கு இல்லாவிட்டாலும், விஜய் களத்தில் ஒரு முக்கியமான பிளேயராக மாறி வருகிறார். எதிர்க்கட்சி வாக்குகள் பிரிவது என்.டி.ஏ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.