நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். இந்திய சுதந்திர போராட்டத் தலைவராக பரவலாக அறியப்பட்டார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளால் இருந்த நூற்றுக் கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி,பிரிட்டிஷாருக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்.
இவரது பிறந்தநாள் ஜனவரி 23 ஆம் தேதி என்பதால், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் அவரது பிறந்தநாளை போற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், ‘’இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனித்துத் துலங்கிய தீரமிகு போராட்டத் தளகர்த்தரும், பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்’ என்ற பாரதியின் சொற்களுக்கு வடிவமாக வாழ்ந்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றி மகிழ்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்,
’இந்திய தேசிய விடுதலையை தன் உயிர் மூச்சாகக் கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்கொண்ட வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று…
உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை உறுதியோடும் இறுதிவரை பயணித்து சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்’’என்று தெரிவித்துள்ளார்.