மாஸ்கோ: உக்ரைனில் போரிட ரஷ்யா வெளிநாட்டில் இருந்து வீரர்களை இறக்கி வருகிறது. வடகொரியாவின் வீரர்கள் சுமார் 12 ஆயிரம் பேர் வரை எல்லையில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு நாட்டில் இருந்து புதிய படையை விளாடிமிர் புதின் இறக்கி உள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு போர் அமைதியாக நடந்து வந்தது. தற்போது போர் தீவிரமாகி உள்ளது. இதற்கு உக்ரைன் நாடு, ரஷ்யா மீது நடத்திய ஏவுகணை தாக்குதல் தான் காரணமாகும்.
அதாவது ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் உக்ரைனுக்கு உதவி வருகிறது. இந்த நாடுகள் சார்பில் ஏவுகணைகள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஏவுகணைகளை பயன்படுத்த இருநாடுகளும் உக்ரைனுக்கு ஒப்புதல் கொடுத்தது.
இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு ரஷ்யாவும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தான் இருநாடுகள் இடையே போர் என்பது முற்றியுள்ளது. இருநாடுகள் இடையேயான இந்த போர் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.
விரைவில் போர் நடவடிக்கை என்பது 3வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் படை வீரர்கள் ஏராளமானவர்கள் இறந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய ராணுவ வீரர்கள் தேவையாக உள்ளது. உக்ரைன் அரசு சொந்த நாட்டு மக்களை களமிறக்கி உள்ளது. அதேவேளையில் ரஷ்யா பிற நாடுகளின் உதவியை கோரியுள்ளது. முதற்கட்டமாக ரஷ்யா தனது நட்பு நாடான வடகொரியாவில் இருந்து வீரர்களை களமிறக்கி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் எல்லையில் இந்த வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நேபாளம், இந்தியா நாடுகளில் இருந்து சிலர் அங்கு போரிட வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர 12 ஆயிரம் வடகொரியா வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொடர்ந்து போர் தீவிரமாகி வருகிறது. இதனால் அடுத்தக்கட்டமாக ரஷ்யா இன்னொரு நாட்டில் இருந்து படைவீரர்களை களமிறக்கி உள்ளது. அதாவது ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ரஷ்யா போரிடுவதற்காக அழைத்து வந்துள்ளது. பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி ஏமனில் இருந்து நூற்றுக்கணக்கான ஹவுதி கிளர்ச்சியாளர்களை ரஷ்யா அழைத்து வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கு போலியான வாக்குறுதிகள் அளித்து ரஷ்யா போருக்கு அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தற்போது ஏமனில் இருந்து இளைஞர்கள் ரஷ்யாவுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதாகவும், ரஷ்யாவின் சிட்டிஷன்ஷிப் (குடியுரிமை) வழங்கவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை நம்பி பலரும் ரஷ்யா செல்லும் நிலையில் அங்கிருந்து அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு உக்ரைன் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பை சேர்ந்தவர்களை போரிட முன்பதிவு செய்யும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கி நடந்தது. ஆனாலும் தற்போது ஏமனில் உள்ள ஹவுதியினரை ரஷ்யாவுக்கு போரிட வைக்கும் இந்த நடவடிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது அந்த நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்த பிறகு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஹவுதியினர் ட்ரோன் தாக்குதலுக்கு பெயர் பெற்றவர்கள். அதோடு செங்கடல் பகுதியில் பெரிய பெரிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி கடத்தி செல்லும் வேலையில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். அதேபோல் தரைவழியாக சென்று பதுங்கி இலக்கை தாக்கவும், நவீன ஆயுதங்களை பயன்படுத்தவும் பயிற்சி பெற்றவர்கள். பொதுவாக ஹவுதி படைக்கு ரஷ்யாவின் ஆதரவு உள்ளதாகவும், ஹவுதிக்கு ரஷ்யா தான் ஆயுத பயிற்சி, போர் பயிற்சி வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. தற்போது ஹவுதி படையினரை ரஷ்யா களமிறக்கி இருப்பது உக்ரைனுக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ரஷ்யா – ஏமன் ஹவுதி அமைப்புக்கான பந்தம் என்பது ஆழமான ஒன்றாக உள்ளது. ஹவுதி படையினரின் ஏழ்மையை பயன்படுத்தி ரஷ்யா அவர்களுக்கு பயற்சி வழங்கி வருகிறது” என்று கூறியுள்ளார். அதோடு ரஷ்யாவுக்கு போரிட்டால் ஹவுதி அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏமன் நாட்டுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் டிம் லெண்டர்கிங் கூறுகையில், ‛‛ஏமன் தலைநகர் சனாவில் ரஷ்யாவை சேர்ந்தவர்களுக்கும், ஹவுதி அமைப்பினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் ஆயுத பரிமாற்றம் செய்வது பற்றி விவாதித்துள்ளனர்.இவர்கள் பரிமாற்றம் செய்யும் ஆயுதம் என்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அதாவது செங்கடல் பகுதியில் ஹவுதிகள் கடலில் கப்பலை குறிவைத்து துல்லியமாக தாக்க அது உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இது உக்ரைனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.