டெல் அவிவ்: இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், போர் நிறுத்தம் அமலுக்கு வந்து 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து இரு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்தாண்டு அக். மாதம் போர் வெடித்த நிலையில், பின்னர் அது இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயான மோதலாக வெடித்தது. பல மாதங்களாக இந்த போர் தொடர்ந்தது.
இதற்கிடையே கடந்த புதன்கிழமை இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்தம் காரணமாக இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயான போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. தாக்குதல்: போர் நிறுத்தம் அமலுக்கு வந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், நேற்றைய தினம் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் ஒரு ராக்கெட் சேமிப்பு நிலையத்தில் ஹிஸ்புல்லா நடமாட்டம் இருந்ததாகவும் அதைக் கண்டறிந்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட மறுநாளே நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பரபரப்பைக் கிளப்புவதாக உள்ளது. அதேநேரம் இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் காயம் அல்லது உயிரிழப்புகள் எதாவது ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து இஸ்ரேல் எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. அதேநேரம் இஸ்ரேல் தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் விளக்கம்: ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியாகவும் இதன் காரணமாகவே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. மேலும், அந்த ஏவுகணை சேமிப்பு கிடங்கு பொதுமக்களால் அணுக முடியாத இடத்தில் இருப்பதாகவும் பொதுமக்கள் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது மட்டுமின்றி தெற்கு லெபனான் பகுதியை நோக்கியும் இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. என்ன ஒப்பந்தம்: கடந்த ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே போர் தொடர்ந்து வந்த நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்றன. இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் மத்தியஸ்தானம் செய்ய இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் 60 நாட்களுக்குப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும். ஹிஸ்புல்லா அமைப்பினர் லிட்டானி ஆற்றின் வடக்கே திரும்பப் பெற வேண்டும். இஸ்ரேல் படை தனது எல்லைக்குத் திரும்ப வேண்டும். எல்லையின் இடைப்பட்ட பகுதியை லெபனான் மற்றும் ஐநா அமைதி காக்கும் படை கண்காணிக்கும் என்பதே ஒப்பந்தமாகும். ஆனால், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த இரண்டு நாட்களில் இரண்டு தாக்குதல்கள் நடந்துள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம்: இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு லெபனானில் உள்ள பல பகுதிகளுக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் பல நபர்கள் வந்தனர். இது ஒரு விதிமீறல். இதன் காரணமாகவே நாங்கள் தாக்குதல் நடத்தினோம். அதேநேரம் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஹிஸ்புல்லா தரப்பும் இதைப் பின்பற்றினால் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும். அதேநேரம் இஸ்ரேல் படை இருக்கும் பகுதிகளுக்கு மக்கள் திரும்ப வேண்டாம். ஏனென்றால் அது விதிமீறலாகவே கருதப்படும். அதுபோன்ற சூழலில் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தப்படும்” என்று அதில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.