மாஸ்கோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் வரும் ஜனவரி மாதம் தான் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். இதற்கிடையே டிரம்பை புத்திசாலி என்று பாராட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், அதேநேரம் டிரம்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்களைத் தேர்வு செய்து வருகிறார். அவர் தனது அமைச்சரவையுடன் அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின்: இதற்கிடையே அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். டிரம்பை ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் அறிவார்ந்த அரசியல்வாதி என்று பாராட்டிய புதின், அதேநேரம் டிரம்பின் மீது ஏற்கனவே கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், அவர் பாதுகாப்பாக இல்லை என்றும் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கொலை முயற்சி: கடந்த ஜூலை மாதம் டிரம்ப் பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்ய முயன்ற போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. டீன் ஏஜ் இளைஞர் நடத்திய அந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிக் குண்டு டிரம்பின் காதில் உரசிச் சென்றது. இதில் அவர் காயமடைந்த போதிலும் நூலிழையில் உயிர் தப்பினார். சில நாட்கள் மட்டுமே இதற்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த டிரம்ப் உடனடியாக பிரச்சார களத்திற்குத் திரும்பினார்.
அதேபோல கடந்த செப். மாதம் டிரம்ப் புளோரிடா கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் டிரம்பை நெருங்கினார். அவரும் டிரம்பை கொலை செய்யவே கோல்ஃப் மைதானத்திற்கு ஆயுதங்களுடன் வந்துள்ளார். அவரையும் டிரம்ப்பின் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
உயிருக்கு ஆபத்து: கஜகஸ்தானில் நடந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதின் இந்த இரு சம்பவங்களையும் குறிப்பிட்டு, டிரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் நடந்த விதம் தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும் அநாகரிகமான முறையில் பிரச்சாரம் நடந்ததாகவும் புதின் விமர்சித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “டிரம்பிற்கு எதிராக முற்றிலும் நாகரீகமற்ற முறைகள் பயன்படுத்தி பிரச்சாரம் செய்துள்ளனர். ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடம் இருக்கக்கூடாது. ஆனால், டிரம்ப்பை எதிர்ப்போர் அவரை படுகொலை செய்யவும் முயன்றுள்ளனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது என்னைக் கேட்டால் டிரம்ப் பாதுகாப்பாக இல்லை என்றே சொல்வேன்.
துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவின் வரலாற்றில் பல மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. ட்ரம்ப் புத்திசாலி என்று நான் நினைக்கிறேன். எனவே, அவர் தனக்கு இருக்கும் ஆபத்துகளைப் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருப்பார் என்று நம்புகிறேன்.
மிக மோசமான பிரச்சாரம்: தேர்தல் பிரச்சாரம் என்பது அரசியல் ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், எதிர் தரப்பினர் டிரம்பின் குடும்பத்தினர், குழந்தைகள் குறித்ததெல்லாம் மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். இது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மக்களை உணர்ச்சி வசப்படுத்தி வாக்குகளைப் பெறவே இதுபோல செய்கிறார்கள். ரஷ்யாவில் எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நிச்சயம் நடக்காது” என்று தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக தங்கள் நாட்டு ஏவுகணைகளைப் பயன்படுத்த தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் அனுமதித்துள்ள நிலையில், இதனால் போர் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு புதின், “இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் உதவுவதாகக் கூறியிருக்கிறார். இப்போது தீவிர தாக்குதலுக்கு அனுமதி அளித்தால் டிரம்ப் வந்த அதை நிறுத்துவது போலக் காட்டி, பிரச்சினையை அவர்கள் முடிக்கலாம். இதற்கான திட்டமாகக் கூட அது இருக்கலாம். டிரம்ப் வரட்டும். என்னவாக போகுது எனப் பார்க்கலாம்” என்றார்