டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது. அங்கு இந்து மத துறவியான சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் என்ன நடந்தது.. இந்த வன்முறைக்கு என்ன காரணம்.. இதுவரை வங்கதேசத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வங்கதேசத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதை 10 முக்கிய பாயிண்டுகளாக பார்க்கலாம்.
1. வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எனப்படும் சந்தன் குமார் தர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
2. சின்மோய் கிருஷ்ணதாஸ் உள்பட 19 பேர் மீது வங்கதேச அரசு தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்திருந்த நிலையில், அந்த வழக்கின்படியே சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் பேரணி நடந்த நிலையில், அதில் வங்கதேச தேசியக் கொடிக்கு மேல் காவி கொடியை ஏற்றியதாக தாஸ் மீது குற்றஞ்சாட்டி தேச துரோக வழக்குப் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3. தாஸின் கைதை தொடர்ந்து வங்கதேச தலைநகர் டாக்கா மற்றும் துறைமுக நகரமான சட்டோகிராம் உட்பட பல்வேறு நகரங்களில் மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்தது. சட்டோகிராமில் நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டம் மிகப் பெரியளவில் ஏற்பட்ட நிலையில், வங்கதேச போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.
4. சட்டோகிராமில் வழக்கறிஞர் கொல்லப்பட்டதே அங்கு மிகப் பெரிய வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது. இதற்கிடையே வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ், வழக்கறிஞரின் கொலைக்குக் கண்டனம் தெரிவித்தார். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அதற்குள் மக்கள் விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடக்கூடாது என அவர் வலியுறுத்தினார். 5. மறுபுறம் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதற்கு அங்குள்ள இஸ்கான் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு அமைதியான வாழும் சூழலை வங்கதேச அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்று இஸ்கான் வலியுறுத்தியது.
6. சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு இந்தியாவிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பு என கட்சிகளைத் தாண்டி பல அரசியல் தலைவர்களும் கவலை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
7. இதற்கிடையே நேற்று வியாழக்கிழமை இஸ்கான் அமைப்பிற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இஸ்கான் அமைப்புக்குத் தடை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரம் வங்கதேச மக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.
8. இந்த நேரத்தில் திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்கான் அமைப்பிடம் இருந்து நேற்று ஒரு அறிவிப்பு வந்தது. அதில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணதாஸின் செயல்பாடுகள் இஸ்கான் நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பவை இல்லை என்றும் ஒழுக்க மீறல் காரணமாக இஸ்கான் அமைப்பின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
9. கிருஷ்ணதாஸுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது போல இஸ்கான் கூறிவிட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், இன்று இஸ்கான் இது தொடர்பாக விளக்கம் கொடுத்தது. அதாவது இஸ்கானின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் கிருஷ்ணதாஸ் இல்லை என்று மட்டுமே குறிப்பிட்டதாகவும் அமைதியான முறையில் போராடும் கிருஷ்ணதாஸ் உட்பட அனைவருக்கும் இஸ்கான் உடன் நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.
10. இதற்கிடையே வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும், கைது செய்யப்பட்ட இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளார். சின்மோஸ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.. மேலும், நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷேக் ஹசீனா வலியுறுத்தினார்.