டெஹ்ரான்: ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதி ஆன்லைன் கான்சர்ட் நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஈரான். இஸ்லாமிய நாடாக அறியப்படும் இந்த நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஈரான் நாட்டை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 11ம் தேதி பரஸ்து அஹமதி ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். பரஸ்டு அஹமதி உடன் மொத்தம் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் பரஸ்டு அஹமதி கருப்பு நிற ஆடை அணிந்து ஹிஜாப் அணியாமல் பாடல்கள் பாடியுள்ளார். முன்னதாக அந்த வீடியோவில், அவர், ‛‛நான் பரஸ்டு. எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன்” என்று கூறியிருந்தார்.
அதாவது ஈரான் நாட்டில் பொதுவெளியில் பெண்கள் பாட அனுமதியில்லை. அதேபோல் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. இருப்பினும் ஈரானின் இந்த உத்தரவை பரஸ்டு அஹமதி விரும்புவது இல்லை. இதனால் தான் அவர் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் ஹிஜாப் அணியாத காரணத்தினால்
மாஷா அமினி என்ற பெயர் கொண்ட பெண் போலீஸ் கஸ்டடியில் இறந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெண்களை கொதிப்படைய வைத்தது. அப்போது அதனை எதிர்த்து பரஸ்டு அஹமதி பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது பரஸ்டு அஹமதி விவகாரம் ஈரானில் சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி ஈரான் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. நீதித்துறை சார்பில் மிஷான் ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‛‛பாடகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி அவர் மீது அவரது இசைக்குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று கூறியுள்ளார்.
ஈரானை பொறுத்தவரை 1979 ம் ஆண்டு முதல் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுவெளியில் பெண்கள் பாட்டு பாடவும் தடை உள்ளது. இத்தகைய சூழலில் தான் பரஸ்டு அஹமதி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் நீதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.