அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் ஷோ, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி இரவு நடந்தது. அப்போது தியேட்டருக்கு வந்த அல்லு அர்ஜூனைப் பார்க்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி (39) என்ற பெண் அகால மரணம் அடைந்தார். இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜூன், ரேவதி குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். ரேவதி இறப்பு சம்பந்தமாக சிக்கட்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அவருக்கு 7697 என்ற கைதி எண் ஒதுக்கப்பட்டது. சுமார் 14 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் காலை அல்லு அர்ஜூன்
விடுவிக்கப்பட்டார்.
‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற படத்தில் வேண்டும் என்றே அல்லு அர்ஜூன் தெலங்கானா முதல்வரை சீண்டுவது போன்ற காட்சியை இடம்பெற வைத்து இருந்தார். இந்நிலையில், ₹900 கோடி வசூல் செய்ததாக சொல்லி தெலங்கானாவில் நடத்தப்பட்ட வெற்றிவிழாவில் பேசிய அல்லு அர்ஜூன், ‘தெலங்கானா முதல்வர், தெலங்கானா முதல்வர்’ என்று 2 முறை தடுமாறினார். பிறகு சமாளித்தபடி, ‘பேசி தொண்டை வறண்டுவிட்டது. ஒரு நிமிடம்’ என்று தண்ணீரைக் குடித்தார். அருகில் இருந்தவர்கள், ‘தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி’ என்று சொன்னதால், அல்லு அர்ஜூன் பேச்சை தொடர்ந்தார். ‘சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்து, திரைத்துறைக்கு ஆதரவு அளிக்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எனது நன்றி’ என்றார்.
இதை குறிப்பிட்டு, தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகன் கே.டி.ராமராவ் கிண்டல் செய்தார். பேட்டி ஒன்றில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு கேடிஆர், ‘சிறப்புக்காட்சிக்கு அனுமதி தருகிறார். சினிமாக்காரர்களுக்கு அவரது பெயர் நினைவில் இல்லாத வகையிலேயே அவருடைய செயல்பாடுகள் இருந்து வருகின்றன’ என்று கிண்டல் செய்தார். உடனே இத்தகவல் தெலங்கானா அரசியல் வட்டாரத்திலும், சோஷியல் மீடியாவிலும் வைரலாகி விட்டது. இதைதொடர்ந்து முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும், அல்லு அர்ஜூனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அல்லு அர்ஜூன் கைது விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டியில், ‘அல்லு அர்ஜூனை கைது செய்தது பற்றி யாரும் பரபரப்பாகப் பேசவில்லை. ஒரு பெண் உயிரை இழந்துள்ளார். அவரது மகன் கோமாவில் இருக்கிறான். அவன் வந்து அம்மாவை கேட்டால், என்ன பதில் ெசால்வது? இதுபற்றி கேள்வி கேட்காதது ஏன்? அல்லு அர்ஜூன் நடிகர். படத்தில் நடிப்பது அவரது வேலை. இந்த நாட்டுக்காக இந்தியா, பாகிஸ்தான் பார்டரில் போய் நின்று சண்டை போட்டு வெற்றி பெற்றாரா? அவர் படத்தில் நடிக்கிறார், பணம் சம்பாதிக்கிறார். சினிமா ஸ்டாராக இருந்தாலும், அரசியல் ஸ்டாராக இருந்தாலும், எங்கள் அரசு அதுபற்றி கவலைப்படாது. குற்றத்தை யார் செய்தார்கள் என்று மட்டுமே கவலைப்படுவோம். அவர் சத்தம் போடாமல் அமைதியாக வந்து படத்தைப் பார்த்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம்’ என்றார்.