உபி: இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி நடைபெற்ற காலத்தில் அதனை எதிர்த்துப் போராடிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ராணியின் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சம்பலில் இந்தியத் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 1857 ஆம் ஆண்டை சேர்ந்த அரண்மனையுடன் தொடர்புடைய பலபடிகளைக் கொண்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிணறு 250 அடி ஆழமுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று ராணி கி பாவ்டி என்று இதனை அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்படி என்றால் ராணி பயன்படுத்திய கிணறு என்று பொருள். இந்தக் கிணற்றுக்கும் 1857 நடைபெற்ற இந்திய முதல் சுதந்திரப் போர் கிளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் அருகே உள்ள லக்ஷ்மன் கஞ்சில் பழங்கால கோயில் ஒன்று இருந்தது. அதைப் பாங்கே பிஹாரி கோயில் என மக்கள் அழைக்கின்றனர். வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பகுதியாக இது கருதப்படுகிறது. இந்திய வரலாற்றுக்கும் மற்றும் கலாச்சாரத்திற்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு உள்ளதாகக் கருத்து நிலவி வந்தது. ஆகவே, அந்த இடத்தினை ஆய்வு செய்ய வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்துவந்தனர். ஏனென்றால், லக்ஷ்மன் கஞ்ச் ஒரு காலத்தில் சஹாஸ்பூரின் அரச குடும்பத்தின் தலைமையகமாக இருந்தது. அந்த இடத்தில்தான் இப்போது இந்தப் படிக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடம் அரச தோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இங்கே ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தவர் சனாதன் சேவக் சங்கத்தின் மாநில விளம்பரத் தலைவர் கௌஷல் கிஷோர். அவரது வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. இவர் இதுதொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார். அதனை விசாரித்த மாவட்ட நீதிபதியை அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வலியுறுத்தினார். ஆகவே, சம்பல் மாவட்ட நீதிபதி ராஜேந்திர பென்சியா அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டார். இரண்டு புல்டவுசர்கள் வைத்துத் தோண்டியதை அடுத்து இப்போது இங்கே படிக்கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு மாடி கட்டிடம் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கே சரியான வெளிச்சம் இல்லாததால் தற்காலிகமாக அகழ்வாராய்ச்சி தடைப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டக் கிளர்ச்சி காலத்தின் அடையாளமாக இந்தக் கட்டடம் மற்றும் கிணறு எஞ்சியிருக்கிறது என்று அகழாய்வு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். எதிர்கால தலைமுறைக்கு இந்த வரலாற்று நினைவிடத்தைக் காட்சிக்கு வைக்கும் திட்டம் உள்ளதாகத் தொடர்ந்து அகழாய்வு பணிகள் தடைப்படாமல் நடக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களின் வீடுகள் உடனடியாக அகற்றப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்தியத் தொல்பொருள் துறை சம்பலில் உள்ள கோயிலில் கார்பன் டேட்டிங் சோதனை நடத்தியது. அதில் இந்தப் பகுதி கடந்த 46 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்தது. அதைக் கடந்த 13 அன்று தான் மீண்டும் திறந்துள்ளனர். அதிகாரிகள் இதன் தொடர்ச்சியாக 19 கிணறுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்