தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை விட நேரடிப் பேச்சுவார்த்தையே சிறந்தது என்று தாய்லாந்து தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் சமீபகாலமாகத் தீவிரமாக மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்த மோதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்பிலும் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்கா, சீனா மற்றும் ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவரான மலேசியா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தன.
எனினும், தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நிகோர்ண்டேஜ் பாலங்குரா, “தற்போது எந்த மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தமும் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று தாய்லாந்து நம்பிக்கை தெரிவிக்கிறது.
நீண்டகாலமாகவே இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன. அவ்வப்போது இந்த மோதல்கள் வன்முறையாகவும் மாறுகின்றன. தாய்லாந்து அமைதியான முறையில் இருதரப்பு வழிமுறைகள் மூலம் இந்த விஷயத்தைத் தீர்க்க விரும்புவதாகவும், ஆனால் கம்போடியா தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் நிகோர்ண்டேஜ் கூறியுள்ளார்.
இருப்பினும், வருங்காலத்தில் ஆசியான் கூட்டமைப்பின் நாடுகள் தலையிட்டு உதவ முன்வந்தால், அதற்குத் தயாராக இருப்பதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.