கூட்டு சேர்ந்த அமெரிக்கா-ரஷ்யா; உக்ரைன் பதில் கொடுக்குமா?

உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை நிறுத்துவது குறித்து சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோவை சந்தித்து பேசினார்.

பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைக் குறித்து ரஷ்ய தரப்பில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து சவுதி அரேபியாவில், அமெரிக்காவும், ரஷ்யாவும் நேர்மறையான, ஆக்கபூர்வமான நான்கு மணி நேர சந்திப்பை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சமாக தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் புதின் கூறியுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போர் சூழலில் திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்ன பதில் கூறுவார் என்ற ஆவலும் எழுந்திருக்கிறது. முன்னதாக, “உக்ரைன் பங்கு பெறாமல் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

மேலும், உக்ரைன் மற்றும் ஐரோப்பா இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.