திருமணத்திற்காக கடத்தி விற்கப்படும் சிறுமிகள் – 5 பேர் கொண்ட கும்பல் கைது

இந்த செய்தியை பகிருங்கள்

திருமணத்திற்காக சிறுமிகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் பிடிபட்டுள்ளது. கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டுள்ளார். இவர்களால் எத்தனை சிறுமிகள் இதுவரைக்கும் கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டம் ஓஜ்கார். இப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 23ஆம் தேதி ஒன்று காணாமல் போய் இருக்கிறார். மகளை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் இறுதியாக போலீசில் புகார் அளித்துள்ளார்கள். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வந்ததில் சிறுமியை கடத்தி சென்ற பெண்ணின் அடையாளம் தெரிய வந்திருக்கிறது.

இதை அடுத்து போலீசார் சிறுமியை கடத்திய பிரியங்கா பாட்டில் என்ற பெண்ணை பிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தோழி ரத்னா கோலி உதவியுடன் துலே மாவட்டம் ஷீர்புரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமும் ஒரு ஆணிடமும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமியை விற்று விட்டதாக சொல்லி இருக்கிறார் .

அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் படி ஷீர்புரில் பதுங்கி இருந்த சுரேகா பாயை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குஜராத் மாநிலம் வதோராவுக்கு திருமணத்திற்காக சிறுமியை அனுப்பி விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

கடைசியாக மத்திய பிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் அந்த சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது . இதையடுத்து அங்கு சென்று சிறுமியை விட்டு உள்ளனர் போலீசார். மேலும், இது தொடர்புடைய நாதுராம், கோவிந்த் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

சிறுமிகளிடம் ஆசைகாட்டி பழகி பின்னர் திருமணத்திற்காக கட்டாயப்படுத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கடந்த காலங்களில் இந்த கும்பல் எத்தனை சிறுமிகளை இது மாதிரி கடத்தி விற்பனை செய்திருக்கிறது என்பது குறித்து போலீசார் கைதாக இருக்கும் ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us