தந்தையோடு கடைக்கு சென்ற “பாலஸ்தீன் சிறுமி”.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! 10 பேருடன் துடிதுடித்து பலி

இந்த செய்தியை பகிருங்கள்

ஜெருசலேம்: பாலஸ்தீன் நாட்டின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

2 ஆம் உலகப்போருக்கு பிறகு அரபு நாடான பாலஸ்தீன் அருகே, யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்ற தனி நாடு பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து பாலஸ்தீன் நாட்டின் பகுதியை ஆக்கிரமித்து தனது எல்லையை இஸ்ரேல் விரிவாக்கம் செய்து வருகிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கு மத்தியிலும் போர்கள் தொடர்ந்து வருகின்றன. இஸ்ரேலுக்கு எதிராக மற்ற அரபு நாடுகளும் போர்களை தொடுத்தன. மேற்கத்திய நாடுகளின் உதவியால் போர்களில் வென்ற இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறி தனது படைபலத்தையும், எல்லைகளையும் பெருக்கிக்கொண்டே செல்கிறது.

அதன் பின்னர் எல்லையோரங்களில் உள்ள பாலஸ்தீன் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துவது, ஏவுகணைகளை கொண்டு தாக்குவது, ஜெருசலத்தில் உள்ள அக்சா மசூதிக்கு தொழுகைக்கு வரும் பாலஸ்தீன மக்களை தாக்குவது போன்ற காரியங்களில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன் மக்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

குறிப்பாக பாலஸ்தீனின் காசா பகுதி இஸ்ரேல் தாக்குதலால் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளையும் உயிர்பலிகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீனின் அல்-குத்ஸ் படைப்பிரிவுடைய தளபதி அல்-ஜபரி காசாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பதாக இஸ்ரேலுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரை கொல்வதற்காக மக்கள் கூட்டம் அதிகம் உள்ள அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் தைசிர் அல் ஜபரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 55 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அலா குதும் என்ற 5 வயது சிறுமியும் அவரது தந்தையும் அடங்குவார்கள். தனது தந்தையோடு அலா குதும் கடைக்கு சென்றுகொண்டிருந்தபோது இஸ்ரேல் அப்பகுதியில் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

தனது கணவரையும் மகளையும் இழந்த தாய் இதுகுறித்து பேசுகையில், இதுபோல் கொலை செய்யப்படும் அளவுக்கு எனது அப்பாவி மகள் என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மதிய உணவு சாப்பிட்டவுடன் சாலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தியதாகவும் காசா மக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பாலஸ்தீன் சிறுவன் கொல்லப்பட்டார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us