மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானம் போல ஆஸ்திரேலியாவில் மற்றொரு மர்மம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் எந்த தடயமும் இன்றி காணாமல் போனது உலகை உலுக்கியுள்ளது.
தாஸ்மேனியாவிலிருந்து நியூ சவுத் வேல்ஸுக்குச் சென்று கொண்டிருந்த விமானம், தாஸ்மேனியாவுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ள பேஸ் ஜலசந்தி (Bass Strait) பகுதியில் திடீரென ரேடியோ தொடர்பு இல்லாமல் மறைந்துவிட்டது. விமானத்திலிருந்து எந்தவிதமான அவசர அழைப்போ (distress signal) அல்லது ரேடியோ தகவலோ அனுப்பப்படவில்லை என்பது விசாரணையாளர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாயமான விமானத்தில் சுமார் 70 வயதுடைய அனுபவமிக்க விமானி, அவரது 60 வயது துணைவியார் மற்றும் அவர்களது செல்ல நாய் ஆகிய மூன்று உயிர்கள் இருந்துள்ளன.
விமானி அந்த விமானத்தை வாங்கி சில மாதங்களே ஆகியுள்ளதால், அவர் விமானத்துடன் பழக்கப்பட சிறிது காலம் ஆகியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி நிக் கிளார்க் தெரிவித்துள்ளார்.
பேஸ் ஜலசந்தி பகுதி, கடந்த காலங்களில் பல மர்மமான விமான விபத்துக்களுக்கும், காணாமல் போன நிகழ்வுகளுக்கும் பெயர் பெற்றது.
விமானம் எங்கு சென்றது, என்ன ஆனது என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்காததால், கடற்படையினர் மற்றும் மீட்புப் படையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எந்தவொரு தடயமோ அல்லது சிதைந்த பாகங்களோ கண்டறியப்படவில்லை. இந்த மர்மமான நிகழ்வு, விமானப் போக்குவரத்து வரலாற்றின் மற்றொரு பெரும் புதிராக மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.