இமயமலையில் நச்சு உலோகங்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இமயமலையில் நச்சு உலோகங்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இமயமலை குறித்து நடத்தப்பட்ட புதிய ஆய்வில், அங்குள்ள மழை மேகங்களில் காட்மியம், தாமிரம், துத்தநாகம் போன்ற நச்சு உலோகங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, தூய்மையான பகுதி என்று கருதப்படும் இமயமலையின் நிலைமைக்கு நேர் எதிராக இருப்பதால் ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான இமயமலை, நீண்டகாலமாக உலகின் தூய்மையான பகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் போஸ் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இந்த நிலை மாறிவருவது தெரியவந்துள்ளது. மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுபாடுகள் இமயமலையின் மிக உயரமான பகுதிகளில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உட்பட பல உடல்நல அபாயங்கள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

பருவமழையின் தொடக்கத்தில் மேற்கு மற்றும் கிழக்கு இமயமலை மேகங்களில் காட்மியம் (Cd), தாமிரம் (Cu), துத்தநாகம் (Zn) போன்ற நச்சு உலோகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கிழக்கு இமயமலைக்கு மேல் உள்ள மேகங்களில் மாசு அளவு 1.5 மடங்கு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இமயமலை அடிவாரத்தில் அதிகரித்து வரும் கனரக வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் ஆகியவை மேகங்களை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நச்சு உலோகங்கள், அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் மூலமோ, மழைநீரை அருந்துவதன் மூலமோ அல்லது சருமத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமோ மனித உடலுக்குள் நுழைகின்றன. இந்த நச்சுப்பொருட்களால் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட 30% அதிக உடல்நல அபாயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல், மேகங்களில் கரைந்துள்ள குரோமியம் (Cr) உடலில் செல்லும்போது, அது புற்றுநோய் ஆபத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஆய்வு முடிவுகள், இமயமலை மழை மேகங்கள் தூய்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இத்தாலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய மேகங்களில் மாசு அளவு குறைவாக இருந்தாலும், இந்த கண்டுபிடிப்புகள் ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகின்றன.