பிரேமலதா திடீர் உத்தரவு! விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது!
வேலூர்: வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். வேலூரில் நேற்று நடைபெற்ற பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், விஜயகாந்தின் புகைப்படத்தை கூட்டணியில் இல்லாத எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.
கூட்டணி பற்றி ஜனவரி 9-ல் அறிவிப்பு:
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அனைத்து கட்சிகளும் ஆட்சியைப் பிடிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளன என்றார். தேமுதிகவும் அதே இலக்குடன் செயல்படுவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து தொண்டர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். வரும் ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில், தேமுதிகவின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘விஜயகாந்த் படம் தனிப்பட்ட சொத்து!’:
“தேமுதிக ஒரு அரசியல் கட்சி, விஜயகாந்த் எங்கள் தலைவர். எனவே, எந்த ஒரு கட்சியோ, அமைப்போ விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது” என்று பிரேமலதா திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில், கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமே விஜயகாந்த் படத்தை பயன்படுத்தலாம் என்றும், தனிப்பட்ட முறையில் யாரும் அவரது படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆணவக்கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தால் தேமுதிக அதை வரவேற்கும் என்றும், தேமுதிக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்ற விஜயகாந்தின் கொள்கையே தங்களது வழி என்றும் பிரேமலதா கூறினார். இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.