யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 7) நடந்த கோர விபத்தில், ரயில் ஏற முயன்ற கல்லூரி மாணவி ஒருவர் தனது ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:
அளவெட்டி, பண்டத்தரிப்பைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர், பிற்பகல் 2:15 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயில் புறப்படத் தொடங்கிய நிலையில், அவசரமாக ஏற முயன்றபோது கால் தவறி ரயில் மற்றும் நடைமேடைக்கு இடையே விழுந்துள்ளார்.
இதனால், அவரது வலது கால் ரயிலில் சிக்கி துண்டானது. சக பயணிகளும், ரயில்வே ஊழியர்களும் உடனடியாக விரைந்து வந்து, படுகாயமடைந்த மாணவியை மீட்டுள்ளனர். உடனடியாக 1990 இலக்க அவசர சேவையின் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து, காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவசரப்பட்டு ரயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.