தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal) பகுதியில், பிலிப்பைன்ஸ் ரோந்து படகைப் பின்தொடர்ந்து வந்த சீனக் கடற்படைக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான மோதலின் வீடியோ காட்சிகளை பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.
நேற்று, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையின் கப்பல், அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகித்துக்கொண்டிருந்தது. அப்போது, பிலிப்பைன்ஸ் கப்பலை விரட்டிச் சென்ற சீனக் கடலோரக் காவல் படைக்கு சொந்தமான கப்பல் (CCG 3104), பிலிப்பைன்ஸின் கப்பலை கடந்து செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதே பகுதியில் இருந்த சீனக் கடற்படை போர்க் கப்பல் (PLA Navy warship, எண் 164) மீது மோதியது. இந்த மோதலால், சீனக் கடலோரக் காவல் படை கப்பலின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதுகுறித்த வீடியோ காட்சிகளை பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தென் சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சர்வதேச நீதிமன்றம் சீனாவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்தபோதிலும், சீனா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த மோதல், அப்பகுதியில் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ், “எங்கள் ரோந்து படகுகள் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்” என்று உறுதியளித்துள்ளார். மோதலில் ஏற்பட்ட சேதம் குறித்து சீனா எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், பிலிப்பைன்ஸ் கப்பல்களை வெளியேற்ற சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாக மட்டும் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம், உலக அரசியல் மற்றும் கடல் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.