பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி நேற்று பேரணி நடத்தியது. இந்தப் பேரணியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி.ஆர்.பாலு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (Special Intensive Revision – SIR) நிறுத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்தத் திருத்தப் பணிகளின் மூலம், ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களை வாக்களிக்கும் உரிமையை இழக்கச் செய்யும் முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இது, “ஜனநாயகத்தின் படுகொலை” என்றும் “வாக்குத் திருட்டு” என்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மகர துவாரில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, போலீஸார் பாராளுமன்ற வீதியில் உள்ள ட்ரான்ஸ்போர்ட் பவன் அருகே தடுத்து நிறுத்தினர்.அப்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தடையை மீறி முன்னேற முயன்றதால், போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு, நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடரும் என்று கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதனால், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.