‘கூலி’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நடிகர் சத்யராஜின் பேச்சால் மேலும் சிறப்படைந்தது. ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவங்கள் மற்றும் அவரது ஸ்டைல் குறித்து சத்யராஜ் பேசிய விஷயங்கள் அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தின.
‘கூலி’ படத்தில் நடிக்க அழைத்தபோது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சத்யராஜிடம், “சார், நீங்க கடைசியா ரஜினி சாருடன் எப்ப நடிச்சீங்க?” என்று கேட்டாராம். அதற்கு சத்யராஜ், “மிஸ்டர் பாரத் படத்தில் நடித்தேன், அது 1986-ல் வந்தது” என்று பதிலளித்துள்ளார். அப்போது லோகேஷ், “அப்போதுதான் சார் நான் பிறந்தேன்” என்று கூறியது, அரங்கில் இருந்தவர்களைச் சிரிக்க வைத்தது.
சினிமாவில் 47 வருடங்கள் அனுபவம் உள்ள சத்யராஜ், “ரஜினிகாந்த் 50 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். எல்லாரும் ரஜினியின் ஸ்டைல் பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ மட்டுமல்ல, ஒரு ‘சூப்பர் ஆக்டர்’. சிகரெட்டை வீசுவது, கூலிங் கிளாஸை மாற்றிப் போடுவது, துண்டை ஸ்டைலாகப் போடுவது என அவர் செய்யும் எல்லாமே ஸ்டைலாகவே இருக்கும்” என்று கூறினார்.
மேலும், மற்ற நடிகர்கள் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது, ரஜினி சார் ஒரு க்ளோசப் ஷாட்டில் திரும்பிப் பார்த்தாலே அது சண்டைக்காட்சி போல இருக்கும் என்றும் சத்யராஜ் ரஜினியைப் புகழ்ந்தார். சத்யராஜின் இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.