சைஞானி இளையராஜா கடந்த 8ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் லண்டனுக்கு படையெடுத்தார்கள். இதில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் தனது அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். இளையராஜா 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். லண்டனில் 90 நிமிடங்களுக்கு மேலாக சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். தனது சிம்பொனியை முடித்த பின்னர், தான் இசையமைத்த படங்களின் பாடல்களின் பின்னணி இசையையும் அரங்கேற்றம் செய்தார். அப்போது “இதயம் போகுதே” என்ற பாடலையும் இளையராஜா பாடினார்.
இசைஞானி இளையராஜாவின் சிம்பொனியை பார்க்க, கேட்க லண்டனில் இருந்த அவரது ரசிகர்களும் சென்றிருந்தார்கள். இதில் மாற்றுத் திறனாளி ரசிகர்களும் சென்றிருந்தார்கள். அதில் லண்டனைச் சேர்ந்த தமிழரான மாற்றுத்திறனாளி ஒருவரும் சிம்பொனியை பார்க்க சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “நான் இருக்கும் வீட்டிற்கும் சிம்பொனி அரங்கேற்றம் நடைபெற உள்ள இடத்திற்கும் சுமார் 150 கிலோ மீட்டர்கள் தொலைவு. சுமார் இரண்டரை மணி நேரம் பயணம் செய்து தான் அங்கு போனோம். நானும் எனது மனைவியும் அங்கு போகும்வரை இளையராஜா பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டு சென்றோம். லண்டனில் எப்போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நான் வரும்போது கார்த்திக் ராஜா உள்ளே வந்தார் அவருக்கு நான் வணக்கம் சொன்னேன்.
லண்டனில் எங்கு எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 60 சதவீத கட்டண சலுகை கொடுப்பார்கள். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுடன் வரும் பராமரிப்பாளர்களுக்கு கட்டணம் எதுவும் வசூல் செய்ய மாட்டார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் வருகிறார்கள் என்றால் அரங்கத்தின் உள்ளே செல்ல அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பெரிய வி.ஐ.பி.யே வந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். மேலும் நாங்கள் உள்ளே வரும்போது அங்கே வழிகாட்டிகளும் தனித்தனியே இருப்பார்கள். இது எல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும் இளையராஜாவின் சிம்பொனியை ரசிகர்கள் கேட்டு கொண்டாடினார்கள்” என பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த அளவிற்கு வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கிறார்கள் என பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்தியா முழுவதும் அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.