காசா நகரில் இஸ்ரேல் மீண்டும் குண்டுவீச்சு நடத்தியுள்ளது. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான எகிப்தின் தலைநகர் கெய்ரோவில், ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யா (Khalil Al-Hayya) தலைமையில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் நடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கத்தாரில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவடைந்தன. அமெரிக்காவின் போர் நிறுத்தத் திட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றமின்மைக்கு இஸ்ரேலும், ஹமாஸும் பரஸ்பரம் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டன.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் அதே வேளையில், இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் பீரங்கிகள் காசா நகரின் கிழக்குப் பகுதிகளில் இரவு முழுவதும் குண்டுவீச்சு நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சாட்சிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் போர் தொடங்கியதிலிருந்து பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 227 பேர் இறந்துள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 103 குழந்தைகள் அடங்குவர். எனினும், இந்த புள்ளிவிவரங்களை இஸ்ரேல் மறுத்துள்ளது.
இந்த புதிய தாக்குதல்கள் ஹமாஸை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவரும் ஒரு உத்தியாக இருக்கலாம் என அரபு தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.