கூலி vs வார்-2: டிக்கெட் புக்கிங்கில் விழுந்த மரண அடி: ரசிகர்கள் அலப்பறை!

கூலி vs வார்-2: டிக்கெட் புக்கிங்கில் விழுந்த மரண அடி:  ரசிகர்கள் அலப்பறை!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கூலி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், பான்-இந்தியா அளவில் உருவாகி இன்று வெளியாகிறது. அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’, ‘விக்ரம்’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ என அனைத்துப் படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், முதன்முறையாக ரஜினியுடன் அவர் இணைந்ததால் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இருப்பினும், இதுவரை லோகேஷ் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் U/A சான்றிதழ் கிடைத்திருந்த நிலையில், கூலி படத்திற்கு மட்டும் ‘A’ சான்றிதழ் கிடைத்தது பல விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக படத்தின் முன்பதிவு பாதிக்கப்படும் என்றும், வசூல் அடி வாங்கும் என்றும் சிலர் விமர்சித்து வந்தனர்.

இந்தச் சூழலில், கூலி படத்துடன் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார்-2 திரைப்படமும் இன்று வெளியாகிறது. இந்த அதிரடி படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவதால், கூலி படத்தின் முன்பதிவு அடி வாங்கும் என்று ஒரு சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்தக் கருத்துக்களை எல்லாம் தவிடு பொடியாக்கி, புக் மை ஷோ தளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் வார்-2 படத்திற்கு 16,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், கூலி படத்திற்கு 23,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், “75 வயதிலும் தலைவர் மாஸ் காட்டுகிறார்” என்று சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் இந்தப் புக்கிங் எண்களைப் பகிர்ந்து, அலப்பறை செய்து வருகின்றனர்.