தணிக்கையில் சிக்கி தவிக்கும் வெற்றிமாறன்: இரண்டு படங்கள் மாபெரும் சிக்கலில்!

தணிக்கையில் சிக்கி தவிக்கும் வெற்றிமாறன்: இரண்டு படங்கள் மாபெரும் சிக்கலில்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தான் இயக்கிய அனைத்துப் படங்களிலும் அழுத்தமான கதைக்களத்தால் தேசிய விருதுகளை வென்று ஒரு தவிர்க்க முடியாத படைப்பாளியாக உயர்ந்தவர். ஆனால், தற்போது அவர் தயாரித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதோடு, அதில் முதலீடு செய்யப்பட்ட 20 கோடி ரூபாய் கேள்விக்குறியாகியிருப்பது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ தொடங்கி சூர்யாவின் ‘அசுரன்’ வரை வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், சில காரணங்களால் சூர்யாவின் ‘வாடிவாசல்’ திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சிம்புவை வைத்து அவர் அறிவித்த ‘வடசென்னை’ தொடர்பான படமும் அப்படியே நிற்கிறது.

இயக்கத்தை மட்டுமின்றி, தயாரிப்பிலும் ஈடுபட்ட வெற்றிமாறன், ‘அறம்’ பட இயக்குனர் கோபி நயனாரின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த ‘மனுஷி’ என்ற படத்தையும், தனது உதவியாளர் வர்ஷா பரத் இயக்கிய ‘பேட் கேர்ள்’ என்ற படத்தையும் தயாரித்தார். இந்த இரண்டு படங்களும் சர்ச்சைக்குரிய காட்சிகளால் தணிக்கைக் குழுவின் தடையில் சிக்கித் தவிக்கின்றன.

இந்த இரண்டு படங்களிலும் 20 கோடி ரூபாய்க்கு மேல் வெற்றிமாறன் முதலீடு செய்திருப்பதால், அதனை மீட்டெடுப்பதற்காக ஒவ்வொரு படத்தையும் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். எப்படியாவது, ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடுவதற்கு அவர் முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.