தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது தலைவர் விஜய்யே முதல்வர் வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பனையூரில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க மற்றும் பா.ஜ.க.வுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்கப்படாது என்றும், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியே அமையும் என்றும் கூட்டத்தில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பது தொடர்பான முழு அதிகாரமும் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், கட்சியின் பணிகள் குறித்தும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என 1200க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் நீண்ட காலமாகவே பேசப்பட்டு வந்த நிலையில், தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ள அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவார் என்ற அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.