நோர்ட் ஸ்ட்ரீம் தாக்குதல்: உக்ரேனியர் இத்தாலியில் கைது!

நோர்ட் ஸ்ட்ரீம் தாக்குதல்: உக்ரேனியர் இத்தாலியில் கைது!

2022ஆம் ஆண்டு பால்டிக் கடலில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் நடந்த தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக இருக்கலாம் என ஜெர்மனியால் சந்தேகிக்கப்பட்ட உக்ரேனியர் ஒருவரை இத்தாலிய நீதிமன்றம் கைது செய்துள்ளது.

49 வயதான அந்த நபர், ஜேர்மன் தனியுரிமை சட்டங்களின் கீழ் Serhii K. என மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், ஐரோப்பிய கைது ஆணை உத்தரவின் பேரில், இத்தாலியின் ரிமினி கடற்கரை நகரத்திற்கு அருகே கைது செய்யப்பட்டார்.

போலொக்னா மேல்முறையீட்டு நீதிமன்றம், செப்டம்பர் 3 அன்று அவரை ஜெர்மனிக்கு நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்கும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், அன்றைய தினமே முடிவு எடுக்கப்படாது என்றும் கூறினார். தான் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, டேனிஷ் தீவான போர்ன்ஹோல்மிற்கு அருகில் உள்ள குழாய்களில் வெடிபொருட்களைப் பொருத்திய குழுவில் இவரும் ஒருவர்.

இவர் மீது வெடிபொருள் தாக்குதல் நடத்த கூட்டுச் சதி, அரசமைப்புக்கு எதிரான நாசவேலை மற்றும் முக்கியமான கட்டமைப்புகளை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புகள், ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோடு, ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணியில் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தையும் உருவாக்கின.